“அதானி என்னை சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
அதானியும் நானும் சந்திக்கவே இல்லை. அதானி குழுமத்துடன் தமிழக அரசு எந்த ஒப்பந்தமும் போடவில்லை என சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
சென்னை : அதானி குழுமத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அதானி சந்திப்பு நிகழ்ந்ததா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று பாமக தரப்பில் தொடர்ந்து விமர்சனம் முன்வைக்கப்பட்டு இருந்தது. இதனை தமிழக அரசு முழுதாக மறுத்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி இவ்விவகாரம் குறித்து விரிவான அறிக்கையும் வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் அளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் கூறுகையில், ” பாமக கட்சி சார்பாக அதானியுடன் முதலமைச்சருக்கு தொடர்பு உள்ளது என பேசினார்கள். அதானி குழுமத்துடன் தொழில் முதலீடு குறித்து பொதுவெளியில் வரும் தவறான தகவல்களுக்கு தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவான விளக்கத்தை 2,3 முறை அளித்துள்ளார். அதன் பிறகும் தொடர்ந்து அவதூறுகள் வந்துகொண்டு தான் இருக்கிறது.
அதானி நிறுவனம் தொடர்பாக தமிழக அரசு மீது தொடர் அவதூறு வைக்கப்படுகிறது. இது தொடர்பாக நான் கேட்கும் கேள்விகள் என்னவென்றால், அதானி மீது சொல்லப்படும் குற்றசாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர் முழக்கமிட்டு வருகின்றனர் . திமுக மீது குறை சொல்லி கொண்டிருக்கும் பாஜகவோ , பாமகவோ இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்தில் ஏற்க தயாராக இருக்கிறதா? நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விளக்கி பேச தயாராக இருக்கிறீர்களா?
இப்போதும் கூறுகிறேன், அதானி குழுமத்திற்கும் தமிழக அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. என்னை அவர் சந்திக்கவும் இல்லை. நான் அவரை பார்க்கவும் இல்லை. இதனை விட ஒரு விளக்கம் தேவையா? இதனை அரசியலாக்க விரும்பவில்லை. அதனால் தான் அந்ததுறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து வந்தார். இப்போது அவர் இங்கு இல்லை அதனால் தான் நான் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்து வருகிறேன்” என அதானி விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.