வலுப்பெறும் தாழ்வு பகுதி.. இன்று கனமழை.. நாளை மிக கனமழை.! எங்கெல்லாம்??
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், இன்று தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்துக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (டிச.10) நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை (டிச.11) கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூரில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. மேலும், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூரில் கனமழை பெய்யலாம் என கணித்துள்ளது.
சென்னை நிலவரம்:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.