கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்.!
இவர், 1999 முதல் 2004 வரை கர்நாடகத்தின் முதல்வராகவும் 2004 முதல் 2008 வரை மகாராஷ்டிர ஆளுநராகவும் பதவி வகித்தார்.
கர்நாடகம்: கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) வயது முதிர்வால் காலமானார். இன்று அதிகாலை 2.45 மணியளவில் அவரது இல்லத்தில் அவர் மரணமடைந்தார். அவரது உடல் இன்று மத்தூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. எஸ்.எம்.கிருஷ்ணா 1932ல் பிறந்தார், இவரது முழுப்பெயர் சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா.
1962ஆம் ஆண்டு கர்நாடக மேல்சபைக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி அரசியலுக்குள் நுழைந்தார் எஸ்.எம். கிருஷ்ணா. பின்னர், 1967ஆம் ஆண்டு பிரஜா சோசியலிஸ்ட் பார்ட்டியில் இணைந்து தேர்தலில் தோல்வி கண்டார்.
பின்னர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டு இந்தியா மற்றும் ராஜீவ் காந்தி ஆட்சிகளில் மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார். 1999ஆம் ஆண்டு கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்று தேர்தலில் வென்று முதல்வரானார் எஸ்.எம்.கிருஷ்ணா.
அதன்படி, 1999 முதல் 2004 வரை கர்நாடக முதல்வராகவும், 2004 முதல் 2008 வரை மகாராஷ்டிரா ஆளுநராகவும் பதவி வகித்தார். 5 ஆண்டுகால முதல்வர் பொறுப்பு முடிந்தவுடன் மகாராஷ்டிர ஆளுநராக இவரை நியமித்தது மத்திய காங்கிரஸ் அரசு. மேலும் 23 மே 2009 அன்று வெளியுறவு அமைச்சகத்தின் பொறுப்பை ஒப்படைத்தார்.
பின்னர், 2009 முதல் 2012 வரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார். பின்னர், மன்மோகன் ஆட்சியிலும் மத்திய அமைச்சராக இருந்தவர், 2017ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அதன்பின், 2023ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு இவருக்கு மத்திய அரசு பத்ம விபூஷன் விருதளித்து கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.