பச்சிளம் குழந்தைகளுக்கு முட்டை உணவு கொடுக்கலாமா? மருத்துவ விவரங்கள் இதோ..
குழந்தை பிறந்து 6 மாதம் கழித்து முட்டை உணவாக கொடுக்கலாமா என்றும் அதன் மற்ற விவரங்கள் குறித்தும் குழந்தைகள் நல மருத்துவர் சாகுல் ராமானுஜ முகுந்தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
குழந்தை பிறந்து 6 மாதம் கழித்து முட்டை உணவாக கொடுக்கலாமா என்றும் அதன் மற்ற விவரங்கள் குறித்தும் குழந்தைகள் நல மருத்துவர் சாகுல் ராமானுஜ முகுந்தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிறந்த பச்சிளம் குழந்தைக்கு எப்போது முட்டையை ஒரு உணவாக கொடுக்க வேண்டும்? அதனை எப்படி கொடுக்க வேண்டும் என்பதை குழந்தைகள் நல மருத்துவர் சாகுல் ராமானுஜ முகுந்தன் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறிய பல்வேறு மருத்துவ தகவல்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
பொதுவாக குழந்தை பிறந்து ஆறு மாதங்களான பிறகு முட்டையை குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், முட்டையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. ஒரு முட்டையில் 6 கிராம் அளவு புரதச்சத்து உள்ளது. இந்த முட்டையில் உள்ள புரதம் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது. மேலும், இதில் உள்ள கோலின் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
முட்டை எப்போது கொடுக்க வேண்டும்?
ஆறு மாதத்திற்கு பிறகு அதாவது, குழந்தை பிறந்து 180 நாட்கள் முடிந்த பின்னர் முட்டையை உணவில் சேர்த்து கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். முட்டை கொடுப்பதற்கு முன்பே காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றை கொடுத்து பழக்கப்படுத்திய பிறகுதான் முட்டை கொடுக்க வேண்டும். முட்டை உணவு கொடுக்கும்போது அதனை காலை உணவாக கொடுப்பது நல்லது.
அப்போதுதான் ஏதேனும் அலர்ஜி ஏற்பட்டால் கூட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும். இதுவே மாலை அல்லது இரவில் முட்டை கொடுப்பதால் குழந்தைக்கு ஒவ்வாமை ஏதேனும் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சற்று சிரமமாக இருக்கும். நன்கு பழகிய பிறகு வேண்டுமானால் மாலையில் முட்டை உணவு கொடுக்கலாம்.
முட்டையை எவ்வாறு கொடுக்க வேண்டும்?
கட்டாயம் முட்டையை வேகவைத்து மட்டுமே கொடுக்க வேண்டும். ஆம்ளைட் போன்ற எண்ணையில் பொரித்த முட்டை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றையும் சேர்க்கக்கூடாது. அவித்த முட்டையுடன் பால் சேர்த்து வேண்டுமானால் குழந்தைக்கு கொடுக்கலாம். மேலும், மஞ்சள் கரு சிறிதளவு வெள்ளை கரு சிறிதளவு சேர்த்து கொடுக்க வேண்டும். தனித்தனியாக கொடுப்பதை காட்டிலும் இவ்வாறு கொடுப்பதன் மூலம் முட்டையின் சுவை சற்று கூடி குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
மற்ற உணவுகளுடன் சேர்த்து முட்டையை கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அலர்ஜி முட்டையால் ஏற்பட்டதா அல்லது அந்த உணவால் ஏற்பட்டதா என கண்டறிவது சற்று கடினமாக இருக்கும்.
அலர்ஜியை கண்டறிவது எப்படி?
முட்டையால் ஏற்பட்ட அலர்ஜியை இரண்டு அறிகுறிகள் மூலம் காணலாம். முட்டை சாப்பிட்ட உடனே உதடு மற்றும் கண் வீங்குதல் மற்றும் ஆங்காங்கே ரேசஸ் (தோல் பகுதியில்) தென்படுவது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். இவ்வாறு நேர்ந்தால் உடனே குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
சில சமயம் முட்டை சாப்பிட்டு நீண்ட நேரம் கழித்து வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் ஏற்படும். இந்த சூழ்நிலைகளில் கட்டாயம் மருத்துவரை அணுகி ஆலோசித்து அதன்படியே குழந்தைகளுக்கு முட்டை கொடுக்க வேண்டும் என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் சகுல் ராமானுஜ முகுந்தன்.