ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட், விஜய் உடன் எந்த பிரச்னையும் இல்லை.! – திருமா விளக்கம்!
விஜயுடன் எந்த பிரச்னையும் இல்லை, ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துக்கள் விசிகவின் நம்பகத்தன்மையை உடைக்கும் வண்ணம் இருந்தது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை : அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய், ஆதவ் அர்ஜுனா பங்கேற்பு, ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் கருத்துக்கள், 6 மாத கால சஸ்பெண்ட் என பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் சற்று முன்னர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் பல்வறு கருத்துக்களை கூறினார். அவர் பேசுகையில், ” ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு மத்திய அரசு வழக்கம் போல தமிழக மக்களை வஞ்சித்து, வெறும், ரூ .948.8 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த புயல் பாதிப்புக்கு விசிக சார்பில் 4 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்களின் சம்பளம் ஆகியவை ரூ.10 லட்சத்தை காசோலையாக முதலமைச்சர் நிவாரண நிதிக்காக முதலமைச்சரிடம் வழங்கி இருக்கிறோம். ” என முதலமைச்சர் சந்திப்பு குறித்த காரணத்தை கூறினார்.
அதனை அடுத்து அவர் பேசுகையில், ” ஆதவ் அர்ஜுனா அண்மை காலமாக பல்வேறு நிகழ்வுகளில், சமூக ஊடகங்களில் வாயிலாகவும் தனது கருத்துக்களை பதிவிட்டதன் மூலம், கட்சியின் நம்பக தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானது. அது தொடர ஆரம்பித்த உடனேயே வாய்மொழி அறிவுறுத்தல்களை ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்கினோம். ஆனாலும் கூட அண்மையில் நடைபெற்ற நிகழ்வு, அதில் அவர் பேசிய பேச்சுகள், கட்சியின் நன் மதிப்புக்கும், நம்பகத்தன்மைக்கும் எதிராக அமைந்த சூழலில் தான், தலைமை நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, ஆதவ் அர்ஜுனாவை 6 மாத காலம் இடைநீக்கம் செய்துள்ளோம். இனிதான் அவர் தனது தரப்பு விளக்கத்தை அளிப்பார். விளக்கம் தர 6 மாதம் உள்ளது. பல முறை வாய்மொழி அறிவுரை கூறியும் அதனை அவர் மீறியதால், அவசரத்தேவை நடவடிக்கையாக இதனை மேற்கொண்டோம். ” என ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் குறித்து பேசினார்.
மேலும், ” திமுக தரப்பில் இருந்து எந்த அழுத்தமும் நெருக்கடியும் எனக்கு இல்லை. அதுபற்றி யாரும் என்னிடம் பேசவில்லை. விஜய் நிகழ்ச்சில் நான் பங்கேற்க வேண்டாம் என முடிவு எடுத்தது எனது சுதந்திரமான முடிவு. அது தவிர விஜய்க்கும், எங்களுக்கும் எந்த மோதலும் இல்லை. சங்கடமும் இல்லை. ஆனால், நானும் விஜயும் ஒரே நிகழ்வில் கலந்து கொண்டால், எங்கள் கொள்கை பகைவர்கள், எங்கள் வளர்ச்சியை விரும்பாதவர்கள். அதனை வாய்ப்பாக பயன்படுத்தி, ஏரளமான வதந்திகளை பரப்பி விடுவார்கள். அரசியல் நலன் கருதி எடுத்து கொண்ட முடிவு. இதனை விகடன் பதிப்பதற்கு சுட்டி காட்டிவிட்டோம். விஜயை வைத்து நடத்துங்கள் என நாங்கள் முன்பே கூறிவிட்டோம்.
அதனை சிலர் திட்டமிட்டே திரித்து பேசுகிறார்கள். ஆதவ் அர்ஜுனா என்னிடம் இந்த நிகழ்வில் கலந்து கொள்வது பற்றி பேசினார். அந்த நூலை உருவாக்கியதில் உங்களுக்கும் (ஆதவ்) பங்குண்டு. நூல் வெளியீட்டில் நீங்கள் பங்கேற்கவேண்டும். ஆனால், அரசியல் பேச வேண்டாம், அம்பேத்கர் பற்றி பேசுங்கள் என கூறினேன். ஆனால், அதனையும் மீறி அவர் பேசினார். இது விசிக மீதான நம்பகத்தன்மையை உடைக்கும் வண்ணம் இருந்தது. கட்சி எதிர்காலத்தை முன்னிறுத்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். ” என விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.