டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனி தீர்மானம்! பாஜக நிலைப்பாடு? சட்டப்பேரவையில் கலகல…
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனி தீர்மானம் மீதான வாதத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆதரவு தெரிவித்ததாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று, மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து வாசித்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அரிட்டாபட்டி அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் கருத்துக்களை பரீசலித்து கொண்டு இந்த சுரங்கம் அமைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் மாநில அரசு அனுமதியின்றி எந்த ஒரு சுரங்கத்திற்கும் அனுமதி அளிக்க கூடாது என்றும் தனித்தீர்மானம் கொண்டுவரப்படுகிறது என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
இந்த தீர்மானம் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஆதரவு தெரிவித்து பலரும் பேசி வருகின்றனர். அப்போது பாஜகவின் கருத்து குறித்து சபாநாயகர் அப்பாவு கேட்டார்.
அதன்படி, பாஜக சார்பாக நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்தார். அப்போது, அந்தப் பகுதி மக்களின் பாதிப்பு இல்லாத வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மூலம் கூடிய சீக்கிரம் மக்களுக்கு நல்லா செய்தி வந்து சேரும் என ஆதரவு என்பதை வெளிப்படையாக தெரிவிக்காமல் பேசினார்.
இதனை அடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ” அப்படி என்றால் நீங்கள் இந்த தீர்மானத்தை ஆதரிப்பதாக எடுத்துக் கொள்கிறோம். ” என பேசி முடித்தார். அதேபோல், பாமக சார்பில் ஜிகேமணி பேசுகையில், ” இந்த தீர்மானம் குறித்து ஆழமாக சிந்தித்து எடுக்கப்பட்ட தீர்மானம். மாநில அரசு திட்டத்தை கொண்டு போகும்போது அதற்கு மத்திய அரசு இசைவு தர வேண்டும். அதேபோல, மத்திய அரசு மாநில எல்லைக்குள் ஒரு திட்டத்தை கொண்டு வரும்போது, மாநில அரசின் அனுமதி குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும்.” எனக் கூறினார். இன்னும் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் டங்ஸ்டன் தீர்மானம் குறித்து பேசி வருகின்றனர்.