திருப்பி கொடுத்த ஆஸ்திரேலியா! 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி!
பார்டர் கவாஸ்கர் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியுள்ளது.
அடிலெய்ட் : ரோஹித் சர்மா தலைமயிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. அதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதனை அடுத்து நேற்று முன்தினம் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 180 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஸ் ரெட்டி 42 ரன்கள் எடுத்திருந்தார். K.L.ராகுல் 37 ரன்களும், சுபமன் கில் 31 ரன்களும் எடுத்திருந்தனர். ஆஸ்திரேலியா அணி சார்பாக மிட்சல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
அடுத்ததாக முதல் இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலிய அணி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் விளாசினார். லாபுசேன் 64 ரன்களும், மெக்ஸ்வீனி 39 ரன்களும் எடுத்திருந்தனர். முதல் இன்னிங்சில் அந்த அணி 337 ரன்கள் எடுத்து. இந்திய அணி சார்பாக பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட் எடுத்திருந்தனர்.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி இந்த முறையும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. கடந்த முறை 180 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்த இந்திய அணி, இந்த முறை 175 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இந்த முறையும் நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் எடுத்திருந்தார். கில் 28 ரன்களும், ரிஷப் பன்ட் 28 ரன்களும், ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்திருந்தனர். கேப்டன் கம்மின்ஸ், 5 விக்கெட்களும் போலந்து 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
இதனை அடுத்து வெறும் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான நாதன் மெக்ஸ்வீனி மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் களமிறங்கி 4 ஓவர்களில் 19 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துவிட்டனர். இதன் மூலம் இரண்டு போட்டிகளில் 1-1 என வெற்றி வீதத்துடன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சமநிலையில் உள்ளன. இன்னும் மீதம் 3 போட்டிகள் உள்ளன.