“சினிமாவில் விஜய் மைனஸ் அதான் அரசியலுக்கு வந்துள்ளார்”…ஆர்.எஸ்.பாரதி பதிலடி!
விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கூறியுள்ளார்.
சென்னை : சென்னையில் நடந்த “எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” எனும் புத்தக வெளியிட்டு விழாவில் பேசும்போது, ” விசிக தலைவர் திருமாவளவன் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு கூட வர முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகளால் எவ்வளவு பிரஷர் இருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது. அவர் இங்கே இல்லை என்றாலும் அவருடைய மனம் இங்கே தான் இருக்கிறது.
இறுமாப்புடன் 200 தொகுதிகள் வெல்வோம் என்று எகத்தாள முழக்கம் இடும் மக்கள் விரோத அரசுக்கு நான் விடும் எச்சரிக்கை. கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்” என பேசியிருந்தார்.
விஜய் இந்த விழாவில் பேசியது அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்காக மாறியிருக்கும் நிலையில், விஜய் பேசியது தொடர்பாக அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவை சேர்ந்த தலைவர்கள் பேசி வருகிறார்கள். குறிப்பாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பேசியிருந்தார்கள். அந்த வகையில், விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி பேசியிருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி ” விஜய் மக்களுக்காக கட்சி ஆரம்பிக்கவில்லை. அவர் திரையுலகில் மைனஸ் ஆக இருந்த காரணத்தால் தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் அரசியலிலும் மைனஸ் ஆகிவிடுவார். திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவேண்டாம். எங்களுடைய கூட்டணியை எந்த சக்தியாலும் அழிக்கவே முடியாது” எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய ஆர்.எஸ்.பாரதி ” நேற்று முளைத்தவர்கள் எல்லாம் திமுகவுக்கு சவால் விடுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் திமுக பற்றிய வரலாறு தெரியவில்லை. வரலாறு தெரியவில்லை என்பதால் தான் சவால் விடுகிறார்கள். திமுகவை எதிர்ப்போர் மண்ணாகி விடுவார்கள்” எனவும் சற்று காட்டத்துடன் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.