“இறுமாப்போடு நானும் சொல்கிறேன் 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்”…விஜய்க்கு கனிமொழி பதிலடி !
200 தொகுதிகளில் திமுக வெல்லும் என்பதை நானும் இறுமாப்போடு சொல்கிறேன் என எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை : 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். வழக்கமாக, தேர்தல் நெருங்கும் போது அரசியல் வட்டாரமே பரபரப்பாக இருக்கும் ஆனால், இந்த முறை தேர்தலுக்கு இன்னும் 1 வருடங்களுக்கு மேல் இருக்கும் சூழலில் இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.
குறிப்பாக, நேற்று சென்னையில் நடைபெற்ற “எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” எனும் புத்தக வெளியிட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் இப்போது வரை அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறிவிட்டது.
அந்த விழாவில் பேசிய விஜய் ” இறுமாப்புடன் 200 தொகுதிகள் வெல்வோம் என்று எகத்தாள முழக்கம் இடும் மக்கள் விரோத அரசுக்கு நான் விடும் எச்சரிக்கை. கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள். அடிப்படை பிரச்னைகளை தீர்க்க மக்களை உண்மையாகவே நேசிக்கிற நல்ல அரசு உருவாக வேண்டும்” என பேசினார்.
விஜய் பேசியதை தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட பலரும் அதற்கு பதில் கூறி வருகிறார்கள். அந்த வரிசையில் 2026 தேர்தலில் திமுக 200 தொகுதிகளை வெல்லாது என்பது போல் பேசிய தவெக தலைவர் விஜய்க்கு தூத்துக்குடி எம்பி கனிமொழி பதில் அளித்துள்ளார்.
திருச்செந்தூரில் திமுக மாநில ஆதி திராவிடர் நலக்குழு தென்மண்டல ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி ” வருகின்ற 2026 தேர்தல் வெற்றி என்பது மக்களாகிய உங்களுடைய கரங்களில் தான் இருக்கிறது. எனவே, கட்டுப்பாடோடு பணியாற்றினால் வெற்றி நிச்சயம் அண்ணன் தளபதி சொன்னது போல 200 தொகுதிகளிலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம். நானும் இறுமாப்போடு சொல்கிறேன் வெற்றி நிச்சயம்” என கூறி த.வெ.க தலைவர் விஜய்க்கு மறைமுகமாக எம்பி கனிமொழி பதில் அளித்துள்ளார்.