“சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை” விஜய் பேச்சுக்கு உதயநிதி காட்டமான பதில்!
விஜய் பங்கேற்ற விழா குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு வரியில் பதிலளித்துள்ளார்.
சென்னை: தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் திருமாவளவனை கலந்துகொள்ள விடாமல் கூட்டணி தடுக்கிறது என்று விஜய் பேசியதும், மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா பேசியதும் சர்ச்சைக்கான முக்கிய கருப்பொருளாக மாறியுள்ளன.
இதில், குறிப்பாக விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று திமுகவை நேரடியாக தாக்கி பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இருவரின் பேச்சுக்கு திமுகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
அந்த வகையில், இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின், காரில் ஏறி சென்று கொண்டிருக்கையில் பத்திரிகையாளர் ஒருவர், மன்னர் ஆட்சி நடப்பதாக ஆதவ் அர்ஜுனா கூறியது குறித்த கேள்விக்கு, “பிறப்பால் யாரும் இங்கே முதல்வராகவில்லை. மக்கள் தேர்வு செய்துதான் முதல்வராகியிருகிறார். அந்த அறிவு கூட இல்லையா”என்று துணை முதலமைச்சர் உதயநிதி நச் பதில் கொடுத்துள்ளார்.
மேலும், அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, ‘நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை’ என்று ஒரு வரியில் பதிலளித்துள்ளார்.