“களத்திற்கே வராத தற்குறி” – விஜய்யை மறைமுகமாக தாக்கிய சேகர்பாபு.!
களத்திற்கே வராதவர்கள் திமுகவை விமர்சிப்பதாக அமைச்சர் சேகர் பாபு விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திமுகவின் 200 தொகுதி இலக்கை கடுமையாக விஜய் விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக பேசிய விஜய், ” மக்களின் அடிப்படைப் பாதுகாப்பான சமூக நீதியைக் கொடுக்காமல், கூட்டணிக் கணக்குகளை மட்டுமே மனதில்வைத்து, ‘200 தொகுதிகளில் வெல்வோம்’ என இறுமாப்போடு பேசும் உங்களின் கணக்குகளை மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்” என கூறியிருந்தார்.
அது மட்டும் இல்லாமல், சம்பிரதாயத்திற்காக மழை நீரில் நின்று போட்டோ எடுக்க முடியாது. சம்பிரதாய ட்விட், சம்பிரதாய அறிக்கை, சம்பிரதாய புகைப்படங்களில் எனக்கு உடன்பாடில்லை. மக்களோடு உணர்வுப்பூர்வமாக எப்போதும் நான் இருப்பேன் என்றும் பேசியிருந்தார்.
இந்நிலையில், சென்னை கொளத்தூரில், 10 கருணை இல்லங்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு விஜய் குறித்து காட்டமாக பேட்டி அளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் சேகர்பாபு , “தமிழகத்தின் அரசியல் தெரியாமல் அறியாமையில் சிலர் திமுக குறித்து கருத்து கூறி வருகிறார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. இதில் குறைவு ஏற்படும் என்று நினைப்பவர்களின் கனவு, பகல் கனவாகவே முடியும்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 என்ற நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதி மேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கே வராதவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் 200 தொகுதிகளில் அல்ல, 234 தொகுதிகளிலும் திமுக வெல்லும். 80 கி.மீ வேகத்தில் செல்லும் திமுகவைப் பார்த்து, 10 கி.மீ வேகத்தில் வருபவர்கள் விமர்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.