“ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு அவரே பொறுப்பு, கட்சி பொறுப்பல்ல” – திருமாவளவன் அதிரடி!
திமுக கூட்டணிக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா பேசி வருவது உண்மை தான் என்று திருமா ஒப்புக்கொண்டுள்ளார்.
சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்றைய தினம் `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா மேடையில் விசிக தலைவர் திருமாவளவன் இல்லை. ஆனால் அவரின் மனசாட்சி இங்குதான் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். ஒன்றே முக்கால் கோடி தலித் மக்கள் கொண்ட இயக்கம் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கேட்பதில் என்ன தவறு. தமிழ்நாட்டை ஆள வேண்டுமென்றால் ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆள வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாக்கப்படக்கூடாது.
2026 தேர்தலுக்கான பணிகள், மன்னராட்சியை ஒழிக்க வேண்டுமென திமுகவை தாக்கிவிட்டு, “கருத்தியல் பேசிய கட்சிகள், ஏன் அம்பேத்கரை மேடை ஏற்றவில்லை?” எனக் கேள்வி எழுப்பிய அவர், மேலும், கருத்தியல் தலைவர் தான் தமிழகத்தை ஆளவேண்டும் என்றார். தற்பொழுது, திமுகவின் கூட்டணி கட்சியான விசிக கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மன்னராட்சியை ஒழிக்க வேண்டுமென பேசியது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகியது.
இந்நிலையில், நேற்றிரவே திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “விசிகவில் ஆதவ் இருந்தாலும், துணை பொதுச்செயலாளராக இருந்தாலும், அவர் அங்கு வாய்ஸ் ஆஃப் காமன் என்கிற நிறுவனத்தின் சார்பில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் சொல்லியிருக்கிற கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு, கட்சி பொறுப்பல்ல. ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச சுதந்திரம் உண்டு. ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக அங்கம் வகிக்கிறது. ‘திமுகவிடம் நான் கேட்க வேண்டியதை நான் நேரடியாகவே கேட்பேன். ஆதவ் அர்ஜூனாவை இயக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். இந்த நிலையிலே திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் கருத்து தெரிவித்து வருகிறார் என்பது உண்மை.
அவரிடம் விளக்கம் கேட்போம். உரிய விளக்கம் கிடைக்கும் என்று பார்ப்போம், அதன்பிறகு இயக்க முன்னணி தோழர்களோடு கலந்து பேசுவோம். கட்சியின் முன்னணி பொறுப்பில் இருக்கிறார். எடுத்தேன் கவிழ்த்தேன் என இதுவரை யார்மீதும் நாங்கள் நடவடிக்கை எடுத்தது இல்லை” என்றார்.
முன்னதாக, திமுகவை ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அவரை திருமாவளவன் பின்னாலிருந்து இயக்குவதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதற்கு பதிலளித்த திருமா, ‘ஆதவ் அர்ஜூனா பேசியது அவரது சொந்தக் கருத்து’ என்று கூறியிருந்தார்.