“நான் பலவீனமானவன் இல்லை” தவெக தலைவர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி!
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு திருமாவளவன் பதில் கொடுத்துள்ளார்.
சென்னை: விகடன் பதிப்பகம் சார்பில் `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நேற்றிரவு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வைத்து மிகவும் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்திரனாக தவெக தலைவர் விஜய், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக கூட்டணி பற்றியும், விசிக தலைவர் திருமாவளவன் பற்றியும் வெளிப்படையாக தனது கருத்துக்களை பேசினார். விசிக தலைவர் திருமாவளவன் பேசிய விஜய், “விசிக தலைவர் திருமாவளவனால் இன்று நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போய்விட்டது.
அம்பேத்கருடைய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு, கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு பிரஷர் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், அவருடைய மனசு முழுக்க முழுக்க நம்மோடு தான் இருக்கும்” என்று வெளிப்படையாக பேசி, மறைமுகமாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால், இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திருச்சி மாவட்டத்தில் வைத்து செய்தியாளர் சந்திப்பு நடத்திய விசிக தலைவர் திருமாவளவன்,”‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்பது போன்ற கருத்தை விஜய் பதிவு செய்திருக்கிறார்.
அதில் எனக்கு உடன்பாடு இல்லை, அப்படி எந்த அழுத்தமும் இல்லை. அழுத்தம் கொடுத்து இணங்கக்கூடிய அளவிற்கு நானோ, விசிகவோ பலவீனமாக இல்லை. மேலும், நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்காமல் போனதற்கு விஜய் காரணம் இல்லை. அவருக்கும் எங்களுக்கும் எந்த சிக்கலும் இல்லை” என்று பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது குறித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எனக்கு எந்தவித அழுத்தமும் அளிக்கவில்லை. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாமென சுதந்திரமாக தான் முடுவெடுத்தேன். திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்பதை பல முறை சொல்லி இருக்கிறேன். தற்போதும் அதையே சொல்கிறேன்’ என்றார்.