இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல்அவுட்! அதிரடி காட்டிய ஸ்டார்க்!
பார்டர் கவாஸ்கர் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிவிட்டது.
அடிலெய்ட் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
அதனை அடுத்து 2வது டெஸ்ட் தொடர், இன்று டிசம்பர் 6ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு பிங்க் நிற பாலில், பகல் – இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
எப்போதும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் கேப்டன் ரோகித் சர்மா, இந்த முறை மிடில் ஆர்டரில் களமிறங்கினார். இருந்தாலும், 3 ரன்களில் போலந்து பந்தில் LBW முறையில் அவுட் ஆகினார். தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 0 ரன்னில் டக் அவுட் ஆகினார். K.L.ராகுல் 37 ரன்கள் எடுத்திருந்தார். சுப்மன் கில் 31 ரன்களும், ரிஷப் பன்ட் 21 ரன்களும், நிதிஷ் ரெட்டி 42 ரன்களும், அஸ்வின் 22 ரன்களும் எடுத்திருந்தனர். விராட் கோலி 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 44 ஓவர்களிலேயே இந்திய அணி அனைத்து விக்கடிகளையும் இழந்து 180 ரன்களில் ஆல் அவுட் ஆகியது.
மிட்சல் ஸ்டார்க் 14.1 ஓவர்கள் வீசி 6 விக்கெட் வீழ்த்தினார். கேப்டன் பேட் கம்மின்ஸ் 12 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டையும், போலந்து 13 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார். ஆஸ்திரேலிய அணி தற்போது தங்கள் முதல் இன்னிங்க்ஸை ஆடி வருகின்றனர்.