“அவதூறு பரப்பாதீர்கள்., அதானியை முதலமைச்சர் சந்திக்கவில்லை!” செந்தில் பாலாஜி திட்டவட்டம்

தொழிலதிபர் அதானியை தமிழ்நாடு முதலமைச்சர் சந்திக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

TN CM MK Stalin - Goutam Adani - TN Minister Senthil Balaji

சென்னை : இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டதில் இருந்து அவர் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் நாடாளுமன்றம் முதல் தமிழக அரசியல் களம் வரையில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக அதானி குழுமத்துடன் தமிழ்நாடு அரசு சூரிய மின்சார சகதி ஒப்பந்தம் போட்டுள்ளது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அதானி சந்திப்பு நடந்ததா என்றெல்லாம் பாமக உள்ளிட்ட கட்சியினர் குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இப்படியான சூழலில், அதானி குழுமத்துடன் தமிழக மின்சாரத்துறை எந்தவித ஒப்பந்தமும் போடவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னர் கூறியிருந்தார். அதனை அடுத்து, தற்போது நீண்ட அறிக்கை மூலம் அதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதில் அவர்கள் கூறுகையில், ” தமிழ்நாடு முதலமைச்சர் அதானியை சந்திக்கவும் இல்லை, அந்த நிறுவனத்துடன் திமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடவுமில்லை. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் ரூ.7.01 சூரிய ஒளி மின்சார கட்டணமாக விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து திமுக ஆட்சியில் வழக்கு ஒன்றை தொடர்ந்துளோம். அது உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. அவதூறு பரப்புவோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், ” தொழிலதிபர் அதானி தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து பேசியது போல எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கற்பனை தகவல்களை பரப்பி வருவதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக ஆட்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், இந்த மாதிரியான அவதூறு கருத்துக்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.

ஒவ்வொரு மாநில அரசும் குறிப்பிட்ட அளவு புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை பயன்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அபதாரம் செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கட்டாய விதியின் கீழ் 2020, 2021,2023 ஆகிய ஆண்டுகளில் 2000 மெகா வாட் சூரிய மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம், மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் மட்டுமே ஒப்பந்தம் செய்துள்ளது. வேறு எந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யவில்லை.

திமுக அரசில் எந்த ஒரு தனியார் நிறுவனத்துடனும் அரசு ஒப்பந்தம் போடவில்லை. அதிமுக ஆட்சியில் 2015 ஆண்டு அதானிக்கு சொந்தமான ஐந்து நிறுவனங்களின் மூலமாக 648 மெகாவாட் சூரிய மின்சக்தியை யூனிட்டுக்கு ரூ.7.01 வீதம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. அதனை அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசின் கீழ் தமிழக மின் உற்பத்தி குழு தயாராக இருந்தது. இதனை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் குறைந்த விலையில் ஒரு யூனிட்டுக்கு ரூ.2.61  மட்டுமே விதிக்கப்பட்டு மத்திய அரசுடன் அடிப்படை விலையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எந்த தனியார் நிறுவனத்துடனும் அல்ல.

இப்படி இருக்க,  முதலமைச்சர் அதானியை அங்கு சந்தித்தார், இங்கு சந்தித்தார், இந்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார் என்றெல்லாம் பொய் தகவலை தொடர்ந்து பரப்பினால் அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” என செந்தில் பாலாஜி அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்