கையில் அரசியலமைப்பு புத்தகம், வாயில் கருப்பு துணி! நாடாளுமன்றத்தில் ராகுல், பிரியங்கா பேரணி!
எதிர்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை எனக் கூறி வாயில் கருப்பு துணி கட்டி, கையில் அரசியலமைப்பு புத்தகத்தோடு புதிய நாடாளுமன்ற வளத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் பேரணி நடத்துகின்றனர்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் திங்களன்று தொடங்கி இன்று வரை எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து ஒத்திவைக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
அதானி குறித்து அமெரிக்க வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ள குற்றசாட்டு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் எனவும், மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்த வேண்டும் எனக் கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு தீர்மானங்களை கொண்டு வருகின்றனர். ஆனால் அதனை இரு அவை சபாநாயகர்களும் ஏற்க மறுக்கின்றனர் எனக்கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று, நாடாளுமன்ற வளாகத்தில் மோடியும் அதானியும் ஒன்று என்ற வாசகம் (ஹிந்தியில்) எழுதப்பட்ட உடைகள் அணிந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து இன்றும் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு வேறு மாதிரியாக தங்கள் எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
இன்று டிசம்பர் 6 அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியபடி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களை பேச அனுமதிப்பதில்லை எனக்கூறி பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் தங்கள் வாயில் கருப்பு துணி கொண்டு மூடி பேரணியில் பங்கேற்று இருந்தனர்.
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியில் ஈடுபட்டு பிறகு, அங்கு வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கர் புகைப்படத்திற்கு, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.