புஷ்பா 2 ‘ஸ்பெஷல் ஷோ’ சோக நிகழ்வு : அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு!
ஹைதிராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி திரையிடலின் போது பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து தியேட்டர் நிர்வாகம் மற்றும் அல்லு அர்ஜுன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஹைதிராபாத் : தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் நேற்று (டிசம்பர் 5) பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுக்க வெளியான திரைப்படம் ‘புஷ்பா 2’. ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்துள்ள இந்த படத்திற்கு நேற்று முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதேநேரம் நேற்று புஷ்பா 2 திரைப்படம் பார்க்க வந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஹைதிராபாத்தில் உள்ள சந்தியா எனும் திரையரங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் படக்குழுவினர் ரசிகர்களுடன் புஷ்பா 2 திரைப்படம் பார்க்க வந்தனர். இதனால் அங்கு ரசிகர்கள் கூட்டம் பெருமளவில் கூடியது.
அப்போது ஒரு பெண் தான் குழந்தைகளுடன் படம் பார்க்க வந்திருந்தார். கூட்ட நெரிசல் அதிகளவில் இருந்ததால் அதனை கலைக்க அப்போது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பெண்ணின் மகன் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஹைதிராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் படக்குழுவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பிரிவுகளின் விவரங்கள் இதோ…
வழக்கு 105 – ஒருவரின் வருகை மற்றொருவரை வெகுவாக பாதிப்பது. அவரின் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துவது.
வழக்கு 118(1) – ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமாக இருப்பது. (நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ)
வழக்கு 3(5) – சாட்சியங்களுக்கான சட்டப்பிரிவு. (இந்த சட்டப்பிரிவு விளக்கங்கள் இணைய வாயிலாக பெறப்பட்டது.)
இதுகுறித்து ஹைதிராபாத் போலீஸ் கமிஷனர் கூறுகையில், “அல்லு அர்ஜுன் வருவதை சந்தியா தியேட்டர் நிர்வாகம் முன்கூட்டியே எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அவருக்கென தனி பாதையை அவர்கள் ஏற்படுத்தி தரவில்லை. இதனாலேயே இங்கு கூட்ட நெரிசல் விபத்துக்குகாரணமாக அமைந்தது.” என தெரிவித்துள்ளார். மேலும், சந்தியா திரையரங்கு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.