பள்ளி கல்லூரி விடுமுறை அப்டேட் : அரையாண்டு தேர்வுகள் எப்போது?
இன்று விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை எனவும், திங்கள் முதல் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவாகி வடதமிழகத்தில் கரையை கடந்த ஃபெஞ்சல் புயலின் தாக்கம் ஒருவாரம் ஆகியும் இன்னும் பல்வேறு பகுதிகளில் தொடர்கிறது. இன்னும் வடதமிழகத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமலே இருக்கின்றனர்.
இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கும் சூழலும் நிலவி வருகிறது. மழைநீர் வடிந்த பிறகு நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டு செயல்பட தொடங்கின. புதுச்சேரி மாநிலத்தில் நிவாரண முகாம்களாக செயல்படும் கல்வி நிலையங்களை தவிர்த்து மற்ற பள்ளி, கல்லூரிகள் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டுள்ளன.
ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாத காரணத்தால், மீட்பு பணிகள் இன்னும் தொடர்வதால், அம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் (டிசம்பர் 6) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். திங்கள் கிழமை முதல் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
புயல் பாதிப்பு காரணமாக கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அரையாண்டு தேர்வுகளானது ஜனவரி மாதம் 2ஆம் தேதி தொடங்கி ஜனவரி 10ஆம் தேதி நடத்தி முடிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் நேற்று அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.