ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி : ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!
தனது ஒரு மாத ஊதியத்தை காசோலையாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலைமைச் செயலாளரிடம் அளித்தார்.
சென்னை : வங்கக் கடலில் உருவான “ஃபெஞ்சல் புயல்” காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சேதங்கள் குறித்து, தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது எனவும், இந்த இயற்கைப் பேரிடரின் விளைவுகளை சமாளிக்க மாநிலத்திற்கு அவசர நிதி உதவி தேவைப்படுவதாகவும், பாதிப்புகளின் அளவு மற்றும் மறுசீரமைப்பின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் கோடியினை உடனடியாக விடுவிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்து கடிதம் ஒன்றையும் பிரதமர் மோடிக்கு எழுதி இருந்தார்.
இதனையடுத்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. அதோடு, தற்காலிக மறுசீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில்ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட பலரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். குறிப்பாக, நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சம் வழங்கி இருந்தார். இதனையடுத்து, தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
இன்று (5.12.2024) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தன்னுடைய ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை தலைமைச் செயலாளர் நா. முருகானந்தமிடம் வழங்கினார். தமிழக முதலவர் ஒரு மாதம் சம்பளம் ரூ.2 லட்சம் என இணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தனது ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். pic.twitter.com/k8OU1dhKja
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 5, 2024