திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?.
கார்த்திகை தீபத்தன்று சொக்கப்பனை கொளுத்த காரணம் என்னவென்றும் மாவலி விளையாட்டின் காரணத்தையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
கார்த்திகை தீபத்தன்று சொக்கப்பனை கொளுத்த காரணம் என்னவென்றும் மாவலி விளையாட்டின் காரணத்தையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை :திருக்கார்த்திகை தினத்தன்று அனைவரது இல்லங்களிலும் விளக்கேற்றி தீபத்திருநாளை கொண்டாடுவது பழங்காலம் முதல் வழக்கமாக உள்ளது . அதேபோல் அன்றைய நாளின் முக்கிய நிகழ்வாக சொக்கப்பன் கொளுத்தும் நிகழ்வும் அனைத்து சிவன் மற்றும் முருகன் ஆலயங்களிலும் வழக்கமாக உள்ளது . அக்னியை கடவுளாக வழிபடும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
திருக்கார்த்திகை என்பது ஒளி வடிவில் இறைவனை கொண்டாடும் விழா எனவும் கூறப்படுகிறது. சிவபெருமான் அடிமுடி தெரியா வண்ணம் பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு ஜோதி பிளம்பாக காட்சியளித்தார் என்பதை நினைவூட்டும் விதமாக சொக்கப்பனை கொளுத்துகின்றோம் என புராணங்கள் கூறுகின்றது.
சொக்கப்பனை உணர்த்தும் தத்துவம் ;
பனை மரத்தின் வேர் முதல் நுனி வரை அனைத்து பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவக்கூடியது. பனைமரம் தேவ மரம் என்றும் பூலோக கற்பக விருட்சம் என்றும் அழைக்கப்படுகிறது. அதனால் தான் பல ஆலயங்களிலும் பனைமரம் ஸ்தல விருட்சமாக உள்ளது. மேலும் பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீப்பற்றக்கூடியது .
பனை மரத்தை போல் வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால் இந்த வாழ்க்கையிலேயே சொர்க்கத்தை கண்டு முக்தியை அடைய முடியும் என்பதை உணர்த்தும் விதமாக சொக்கப்பனை அல்லது சொர்க்கப்பனை கொளுத்தப்படுகிறது. சொக்கப்பனை கொளுத்திய பின் கிடைக்கும் சாம்பலை வயல்வெளிகளில் தூவினால் அந்த முறை அமோக விளைச்சல் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது .
சங்க கால இலக்கியங்களில் நற்றிணை, பரிபாடல், புறநானூறு போன்றவற்றில் பல்வேறு இடங்களில் கார்த்திகை தீபத்தன்று மக்கள் விளக்கேற்றி வழிபட்ட காட்சிகளை சிறப்பித்து கூறுகின்றது .இந்த சொக்கப்பனை ருத்ர தீபம் என்றும் கூறுகின்றனர். கார்த்திகை தீபத்தின் காலை நேரத்திலேயே கோவில் பகுதிகளில் பனைமரம் நற்று அதை சுற்றிலும் பனை ஓலை கட்டப்படுகிறது. கார்த்திகை விளக்கு வீடுகளில் ஏற்றி வழிபாட்டப் பிறகு பௌர்ணமி ஒளியின் வெளிச்சத்தில் சொக்கப்பனானது கொளுத்தப்பட்டு ஒரு பனைமரம் அளவிற்கு ஜோதி வடிவில் எரிகின்றது. இது இறைவன் ஜோதி பிழம்பாக தோன்றியவர் என்பதை உணர்த்துவதாக கூறப்படுகிறது.
மாவலி விளையாட்டு ;
இதேபோல் கார்த்திகை தீபத்திருநாள் அன்று மாவலி சுற்றுதல் விளையாட்டு நிகழும். பாதாளத்தில் வசிக்கும் மாவலி.. கார்த்திகை தீபத் திருநாளில் மண்ணுலகம் வந்து தீப அலங்காரத்தை கண்டு மகிழ்கிறார் என்பது ஐதீகம். இதனால் அவரது பெயரான மாவலி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஆனால் தற்போதைய தலைமுறைக்கு மாவலி என்றாலே தெரிவதில்லை. அதனால் மறைந்து வரும் நம்முடைய பண்டைய கலாச்சாரத்தை நம் தலைமுறையினருக்கும் எடுத்துச் சொல்வோம்.