திருவண்ணாமலை : கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது தீப திருவிழா!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது
திருவண்ணாமலை : ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் நடைபெறும் திருக்கார்த்திகை பண்டிகையை மக்கள் சிறப்பான பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். எனவே, திருக்கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கப்பட்டு மகாதீபம் ஏற்றப்பட்டு வருவதும் வழக்கம்.
இந்த தரிசனத்தை காண வேண்டும் என்பதற்காகவே ஏராளமான மக்கள் பல மாவட்டங்களில் இருந்தும் அங்கு வருகை தருவார்கள். இந்நிலையில், இந்த ஆண்டு திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது.
அண்ணாமலையார் திருக்கோயிலில் அண்ணாமலையார் சன்னதி அருகே அமைந்துள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றுத்துடன் கோலாகலமாக கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. இதனைக்கான அங்கு ஆயிரக்கணக்கானோர் வருகை தந்திருந்தார்கள்.
இதனையடுத்து, காலை பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் பவனி நடைபெற்றது. இதில் பல்லாயிரகணக்கான பக்கத்தர் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்தனர். அதன்பிறகு இன்று இரவில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி பவனியும் நடைபெறவும் இருக்கிறது.
மேலும், அதைப்போலவே வருகின்ற டிசம்பர் 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறையின் முன்பு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது. அதற்கு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, தெலுங்கானா என வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தமாக 10 நாட்கள் இந்த திருவிழாவானது நடைபெறும். விழாவின் இறுதியாக வரும் டிசம்பர் 15-ஆம் தேதி இரவு 9 மணிக்கு தெப்பல் உற்சவத்தில் பராசக்தி அம்மன் உற்சவம் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.