கண்ணீரில் சின்னத்திரை! புற்றுநோயால் உயிரிழந்த நடிகர் நேத்ரன்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சின்னத்திரை நடிகர் நேத்ரன் நேற்று உயிரிழந்தார்.
சென்னை : சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட பல்வேறு தமிழ் சேனல்களில் ரியாலட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்து தமிழ் சின்னத்திரையில் முக்கிய நபராக வலம் வந்தவர் நடிகர் நேத்ரன். சுமார் 25 ஆண்டுகளாக சின்னத்திரை மற்றும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து பரிட்சையமானவர்.
நேத்ரன், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி நேத்ரன் உயிரிழந்தார் என்ற செய்தி வெளியானது. இவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகர்கள் பலர் தங்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
சின்னத்திரை நடிகர் நேத்ரனின் மனைவி தீபாவும் பிரபல சீரியல் நடிகை ஆவார். இவருக்கு அபிநயா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். அபிநயா கானா காணும் காலங்கள் சீசன் 2வில் நடித்துள்ளார். அபிநயா அண்மையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “அப்பாவுக்கு கேன்சர் பாசிட்டிவ். சர்ஜரி பண்ணிட்டாங்க. கல்லீரல் சேதமடைந்துள்ளது. மறுபடி ஐசியூவில் வச்சிருக்காங்க. அப்பா சீக்கிரம் சரியாகி வரணும்! நீங்க எல்லாரும் வேண்டிக்கொள்ளுங்கள் ’ என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.