வெள்ள பாதிப்பு: பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியது என்ன? புட்டு புட்டு வைத்த மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
சென்னை: ஃபெஞ்சல் புயல், வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புயலின் காரணமாக, திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது.
குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதோடு நிலச்சரிவு ஏற்பட்டு பரிதாபமாக 7 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 12 பேர் இந்த ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், புயல் பாதிப்புகள் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள அவர் தற்காலிக சீரமைப்பு பணிக்காக 2,475 கோடி கோரியுள்ளார். முதற்கட்ட கணக்கெடுப்பில் 69 லட்சம் குடும்பங்கள், 2,11,139 ஹெக்டேர் விவசாய நிலம், 9,576 கி.மீ சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடிதம் எழுதியதை தொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார். தற்பொழுது, இந்த பேச்சுவார்த்தையின் போது நடந்த விஷத்தையும் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்தேன்.
மேலும், தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி, புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்.
தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை பிரதமர் மோடி உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
#CycloneFengal தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்கள் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்…
— M.K.Stalin (@mkstalin) December 3, 2024