எங்களுக்கு சென்னையா? உங்களுக்கு விழுப்புரம்! இபிஎஸ் கடும் விமர்சனம்!
அதிமுகவால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்தார்கள் என்றால், திமுகவால் நேற்று கிருஷ்ணகிரி மக்கள் தூக்கத்தை தொலைத்து விட்டனர் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : ஃபெஞ்சல் புயல் கரையை கடந்ததன் காரணமாக விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி மக்கள் வசிக்கும் பகுதிகள் சாலையோரங்களில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அம்மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்து வருகிறார். இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ” கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு 51 செமீ எஅளவுக்கு கனமழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஊத்தங்கரை, போச்சம்பள்ளி தாலுகாக்களில் அதிகமாக பெய்த கனமழை காரணமாக அங்குள்ள ஏரிகள் நிரம்பி உபரிநீர் அதிகமாக வெளியேறியது.
இதில், ஊத்தங்கரை ஏரி அருகே அமைந்த பேருந்து நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த்த 50 வாகனங்கள் (வேன்கள்) சாலைக்கு அருகில் இருந்த பள்ளத்தில் நீரில் அடித்து செல்லப்படும் நிலையில் உள்ளன. பகுதி அளவு நீரில் மூழ்கிய இந்த ஆம்னி வேன்களை சீர் செய்ய அதிக செலாகும். ஆம்னி வேன்களை நம்பி தான் பலர் இருக்கின்றனர்.
இது சபரிமலை சீசன். இப்பொது தான் அவர்களுக்கு அதிக சவாரி வரும். இப்போது அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும். ஏரிக்கரை ஒட்டியுள்ள 55 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இனி எதிர்வருகின்ற காலத்தில் எரிக்கரையோர மக்களுக்கு பாதுகாப்பான இடத்தை அரசு அளிக்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன். நெற்பயிர், பருத்தி சாகுபடி செய்த விளைநிலங்கள் கடும் சேதமடைந்துள்ளன. அங்கு, அரசு வருவாய் துறை, வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என இபிஎஸ் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் நேற்று தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த அதிமுக என கூறியிருந்தார். ஆனால் தற்போது திமுக அரசில் விழுப்புரம் மக்கள் தூக்கத்தை தொலைத்து விட்டார்கள்” என விமர்சனம் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி.