‘திமுக அரசு நாடகமாடுகிறது, விஜயை கேள்வி கேட்போம்’ – அண்ணாமலை விளாசல்!
சென்னை விமான நிலையத்தில், அண்ணாமலைக்கு 'பாரத் மாதா கி ஜே' என்று கோஷம் எழுப்பி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
சென்னை : சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்றிருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படிப்பை முடித்துவிட்டு, இன்று (டிச.1) நாடு (தமிழகம்) திரும்பியுள்ளார்.
இந்நிலையில், மூன்று மாதத்திற்கு பின்னர் தமிழகம் திரும்பிய அண்ணாமலையை சென்னை விமான நிலையத்தில், ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோஷம் எழுப்பி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
லண்டனில் இருந்து தாயகம் திரும்பிய பின், முதல் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலையிடம், விஜய் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், விஜய் அரசியல் குறித்தும், துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது குறித்தும் கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, “விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறோம். அவர், தீவிர அரசியலுக்கு வரும் போது நாங்கள் எங்கள் கருத்தை முன்வைப்போம்” என்று கூறியதோடு, “துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினை விமர்சிக்க வேண்டிய இடத்தில் விமர்சிப்போம், நன்றாக செயல்பட்டால் பாராட்டுவோம்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “2026 சட்டப்பேரவைத் தேர்தல் சரித்திர தேர்தலாக இருக்கும். திமுகவும், ஆம் ஆத்மியும் வித்தியாசமான அரசியல் பாதையில் பயணிப்பதாக சாடினார். தி.மு.க என்பது ஒரு குடும்பத்திற்கான கட்சி என்பதை உதயநிதியின் துணை முதலமைச்சர் பதவி உறுதிப்படுத்துகிறது.
உதயநிதியின் செயல்பாடுகளை கவனித்து விமர்சிக்க வேண்டிய இடத்தில் நிச்சயம் விமர்சிப்பேன். தமிழகத்தை ஆளும் திமுக அரசு நல்லது செய்தால் பாஜக நிச்சயம் வரவேற்கும்” என்றும் அவர் கூறினார்.
விஜய்யை விமர்சித்த அண்ணாமலை
திராவிட சித்தாந்தத்தையே விஜய் பேசுவதாகவும், புதிதாக ஒன்றும் பேசவில்லை எனவும் கூறிய அவர், அக்டோபர் மாதத்திற்கு பிறகு விஜய் எத்தனை முறை வெளியே வந்தார் என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் திராவிட கட்சிகள் மூன்றாக பிரிந்துள்ளன. திராவிட கட்சிகளின் கொள்கையைத் தான் விஜயும் பேசுகிறார். கேள்வி கேட்கிற இடத்தில் விஜயை, பாஜக கேள்வி கேட்கும், பாஜகவை பொறுத்தவரை புதிய கட்சிகளுக்கு பயப்படாது என்று கூறினார்.
விஜய்யை வரவேற்ற அண்ணாமலை
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்கிறேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என கூறும் விஜயின் தீவிர அரசியலுக்கு பிறகு, அவரது செயல்பாடுகள் குறித்து பேசலாம். நடிகர் விஜய் மிகவும் புகழ்பெற்ற நடிகர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, இந்திய அளவில் ஒரு படத்திற்கு அதிக வசூலை குவிக்கும் நடிகராகவும் விஜய் உள்ளார். அரசியல் என்பது 365 நாட்களும் உழைக்க வேண்டியது என்பது விஜய்க்கு புரிய வேண்டும் என்றார்.
செந்தில் பாலாஜியை கொண்டாடும் ஸ்டாலின்
இந்திய அரசியலில் ஆம் ஆத்மி, திமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே வித்தியாசமான பாதையில் பயணிக்கின்றன. ஒரு நிரபராதியைக் கொண்டாடுவது போல, செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் கொண்டாடுகிறார்.
பிணையில் வெளியே வந்திருக்கும் ஒருவரை, திமுக காந்தியவாதியைப் போல கொண்டாடுகிறது. செந்தில் பாலாஜி வெளியே வரும்வரை புதிய அமைச்சர்களின் பதவியேற்புக்காக முதல்வர் காத்துக் கொண்டிருந்தார் என்று அண்ணாமலை கூறிஉள்ளார்.