கரையை கடந்த ஃபெஞ்சல்? புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்குக.. வானிலை ஆய்வு மையம்!
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டுகள் இறக்கப்பட்டன.
சென்னை : ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கி இரவு 11.30 மணியளவில் கடந்து முடித்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. ஆனால், இன்று காலை வரை புயல் கடலிலேயே இருப்பதாகவும் அது கரையை கடக்கவே இல்லை என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்ததாக சொல்லப்பட்ட நிலையில், கடலூர் துறைமுகத்தில் ஏற்றப்பட்ட 7ம் புயல் கூண்டு உட்பட 9 துறைமுகங்களிலும் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டுகள் இறக்கப்பட்டன.
முன்னதாக, வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், கடலூர் துறைமுகத்தில் 7-ம் எண் எச்சரிக்கை கூண்டும், நாகை, காரைக்கால் துறைமுகத்தில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்படிருந்தது குறிப்பிடத்தக்கது.