புயல் எதிரொலி: புதுவையில் முகாம்களாக மாறும் பள்ளி-கல்லூரி.. மீட்பு பணியில் NDRF குழு!
ஃபெஞ்சல் புயல் எதிரொலியால், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட புதுச்சேரியில் மீட்பு பணியில் NDRF குழு களமிறங்கியுள்ளது.
புதுச்சேரி : ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியில் கோரத் தாண்டவம் ஆடியுள்ளது. ஒரே நாளில் பெய்த 47 செ.மீ மழையால் கருவடிக்குப்பம், காட்டுக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக சித்தன்குடி, வெங்கட்டா நகரில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் 100-க்கும் மேற்பட்ட கார்கள், பைக்குகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பல இடங்களில் சாலையோரங்களில் இருந்த மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மீட்புப் பணிகளில் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் களமிறங்கியுள்ளனர்.
குறிப்பாக, வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் தவிக்கும் மக்கள் படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளையும் முகாம்களாக மாற்ற ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.
புதுவையில் ஃபெஞ்சல் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏராளமான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால், மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகள் முகாம்களாக மாறவுள்ளதால் நாளை விடுமுறை அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.