20 வருடங்களில் இல்லாத அளவில் புதுச்சேரியை புரட்டிப்போட்ட புயல்.. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்!
புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவாக, 46 செ.மீ. அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்ககிறது.
புதுச்சேரி : நேற்றிரவு கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே ஆணி அடித்தது போல நிற்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த பொது, புதுச்சேரி பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஒரே நாளில் 47 செ.மீ மழை பெய்துள்ளதால், தாழ்வானப் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது.
தமிழகம் – புதுச்சேரி எல்லைப்பகுதியான கோட்டக்குப்பம், ஆரோவில், பொம்மையார்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. அந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக சித்தன்குடி, வெங்கட்டா நகரில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் 100-க்கும் மேற்பட்ட கார்கள், பைக்குகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இந்நிலையில், புதுவையில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவாக (அதாவது) கடந்த 2004க்கு பின் கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஃபெஞ்சல் புயல் புதுவைக்கு அருகே நிலைகொண்டுள்ளதாகவும், அது மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 3 மணிநேரத்தில் வலுவிழக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், புதுவையில் கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபருக்கு பின்னர் தற்போது புதுச்சேரியில் கனமழை பெய்துள்ளது. அக். 31 2004ல் ஒரே நாளில் 21 செ.மீ மழை பதிவான நிலையில், நேற்று 46 செ.மீ பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.
வெள்ளக்காடாக மாறிய புதுச்சேரி
விடாமல் வெளுத்து வாங்கிய கனமழையால், வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் தவிக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்பு படையினர், மக்களை மீட்டு வருகின்றனர். அதிக அளவிலான மழை பெய்ததன் காரணமாக, புதுவை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.