ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கிறது – பாலச்சந்திரன் கொடுத்த தகவல்!
ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 100 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள “ஃபெஞ்சல்” புயலானது எப்போது கரையை கடக்கும்? எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றி தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்பதை உறுதிப்படுத்தினார்.
இது குறித்து பேசிய அவர் ” தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று(நவ.30) மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் . ஃபெஞ்சல் புயல் காரணமாக 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் புயல் முழுமையாக கரையை கடக்க சில மணி நேரங்கள் ஆகலாம்.
புயலின் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும். அதைப்போல, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும். புயல் கரையை கடக்கும்போது திருவள்ளூர் தொடங்கி மயிலாடுதுறை வரை 90 கி-மீ வேகத்தில்
காற்று வீசும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” எனவும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.