வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பில்லை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து உள்ளதால் புயலாக மாற வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த 2 நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகம் நோக்கி நகர்ந்து வந்தது. நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், புயலாக மாறும் என்றும், புயலாகவே தமிழகத்தை கடக்கும் என வானிலை ஆய்வு மண்டலம் சார்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்த தகவலின் படி, ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவிழந்து வருகிறது என்றும், அது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இது மேலும் வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே நாளை (நவம்பர் 30) கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 470 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 410 கிமீ தொலைவிலும், நாகையில் இருந்து 340 கிமீ தொலைவிலும் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது என்றும், 9கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் , இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மாமல்லபுரம் – காரைக்கால் கடற்கரைக்கு இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளை கரையை கடக்கும் வரையில் வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.