டெல்லியில் ஜப்பானிய மூளை காய்ச்சல்! சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுவதென்ன?
டெல்லியில் 72 வயது முதியவருக்கு ஜப்பானிய மூளை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார் என மாநில சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : தலைநகர் டெல்லியில் அண்மையில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் எனும் Japanese Encephalitis (JE) எனும் வைரஸ் காய்ச்சல் பரவிய ஒருவர் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்ற தகவலை அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது பரவும் வகை வைரஸ் காய்ச்சல் என்றாலும், மாநிலதில் வேறு யாருக்கும் பரவவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கு டெல்லி பகுதியில் உத்தம் நகர் பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர் கடந்த நவம்பர் 3ஆம் தேதி காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் இருந்துள்ளது. தொடர் சிகிச்சையின் நடுவே, நவம்பர் 6ஆம் தேதி ஜப்பானிய மூளைகாய்ச்சலுக்கான சோதனை செய்யப்பட்டு பின்னர் ஜப்பானிய மூளைகாய்ச்சல் உறுதிசெய்யப்பட்டது.
இது அண்டை மாநிலத்தில் இருந்து பரவி இருக்கலாம் என்றும், டெல்லி மாநிலத்தில் வேறு யாருக்கும் இந்த வகை காய்ச்சல் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வகை காய்ச்சலால் 2024இல் இதுவரை 1548 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அசாமில் 925 பேருக்கு இந்த வகை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அசாமில் தான் முதன் முதலாக இந்த மூளை காய்ச்சல் பரவியது.
இந்த வைரஸ் தொற்றானது, நீர்பறவைகள், பன்றிகள், culex வகை கொசுக்கள் மூலமும் இந்த ஜப்பானிய காய்ச்சல் பரவுகிறது. இந்த வைரஸ் தாக்கத்தினால் அதீத காய்ச்சல், நரம்பியல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
2006இல் அசாமில் தோன்றிய இந்த ஜப்பானிய வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 1500 பேர் உயிரிழந்துள்ளனர். 2013 முதல் இதற்கான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்பட்டு வருகின்றன என்றும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.