‘தமிழகத்தில் இரவு முதல் மழை அதிகரிக்கும்’…டெல்டா வேந்தர்மேன் கொடுத்த அப்டேட்!
தமிழகத்தில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றே புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், அடுத்த 12 மணி நேரத்தில் ஃபெங்கல் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர், ‘நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் எனவும் மக்கள் யாரும் அச்சப் பட வேண்டாம் எனவும்’ அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “புயலாக உருவெடுக்க இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவ-30க்குள் ஆழமான காற்றழுத்த தாழ்வுப் புயலாக, சென்னை, மகாபல்லிபுரம் மற்றும் நாகப்பட்டினம் இடையே குறிப்பாக கடலூர் மற்றும் புதுச்சேரியில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.
மேலும் இன்று தமிழகத்தில் வட கடலோரத்தில் ஒரு சில இடங்களில் மேகமூட்டமான வானிலையுடன் அவ்வப்போது லேசான மழை மற்றும் அசாதாரண காற்றுடன் கூடிய வானிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்று இரவு முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், நாளை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பேட்டை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழையுடன் கூடிய கனமழை பெய்யும். அதே வேளை நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது”, என டெல்டா வேதர்மேன் ஹேமச்சந்திரன் பதிவிட்டுள்ளார்.