மகாராஷ்டிரா முதலமைச்சர் ரேஸில் பின்வாங்கிய ஷிண்டே! பரபரப்பு பேட்டி!
மகாராஷ்டிரா முதலமைச்சர் விவகாரத்தில் ஏன்னால் எந்த பிரச்னையும் ஏற்படாது. பிரதமர் மோடி கூறுவதை நான் ஆதரிப்பேன் என ஏக்நாத் ஷிண்டே பேட்டியளித்துள்ளார்.
தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக மட்டுமே தனித்து 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 13 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது.
இப்படியான சூழலில், கடந்த முறை போல பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் பொறுப்பை கேட்கலாம் என்ற எண்ணத்தில் சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே இருந்தார் எனக் அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால் கடந்த முறையை விட அதிக இடத்தில் பாஜக வென்றதாலும், சிவசேனா ஆதரவு இல்லாமலும் வேற்று கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும் சூழல் இருப்பதாலும், பாஜக இந்த முறை முதலமைச்சர் பொறுப்பை விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை என்ற சூழல் மகாராஷ்டிராவில் நிலவியது.
ஆதலால், இந்த முறை மகாராஷ்டிரா முதலமைச்சராக பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் நியமிக்கப்படுவார் என்றே கூறப்படுகிறது. இபப்டியான சூழலில் தான் அண்மையில் முதலமைச்சர் பொறுப்பை சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்தார். தற்போது அவர், அடுத்த முதல்வர் பொறுப்பேற்கும் வரையில் பொறுப்பு முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
முதலமைச்சர் ரேஸில் ஏக்நாத் ஷிண்டே இருக்கிறார். மீண்டும் முதலமைச்சர் பொறுப்பு கேட்கிறார் என்றெல்லாம் மகாராஷ்டிரா அரசியலில் பல்வேறு செய்திகள் உலா வந்திருந்த வேளையில், தற்போது புனேவில் செய்தியாளர்களை சந்தித்து ஏக்நாத் ஷிண்டே அதற்கான பல்வேறு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், ” என்னால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. இதுகுறித்து உங்கள் (பிரதமர் மோடி) மனதில் எந்த சந்தேகமும் ஏற்பட வேண்டாம். நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் அந்த முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று பிரதமரிடம் நான் கூறியுள்ளேன். நீங்கள் (பிரதமர் மோடி) எங்கள் குடும்பத்தின் தலைவர். உங்கள் முடிவை பாஜகவினர் எப்படி ஏற்றுக்கொள்கிறார்களோ, அதேபோல் உங்கள் முடிவை நாங்களும் ஏற்றுக்கொள்வோம். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, என்னால் ஆட்சி அமைப்பதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது என்று கூறினேன்.
மகாயுதி கூட்டணியை ஆதரித்து, எங்களுக்கு மகத்தான வெற்றியை அளித்ததற்காக, மகாராஷ்டிராவின் அனைத்து வாக்காளர்களுக்கும் நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அமித் ஷாவும், பிரதமர் மோடியும், பாலாசாகேப் தாக்கரேவின் கனவை நிறைவேற்றியுள்ளனர். அவர்கள் எப்போதும் என்னுடன் துணை நிற்கிறார்கள். மகாயுதி கூட்டணியில் இருந்து யார் முதல்வராக தேர்வு செய்யப்பட்டாலும், அவருக்கு சிவசேனா கட்சியினர் ஆதரவு அளிப்பார்கள்” என்று மகாராஷ்டிரா பொறுப்பு முதல்வரும், சிவசேனா கட்சி தலைவருமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.