“டீம்னா எல்லாருமே தான் டா” விடுதலை மேடையில் கடுப்பாகி கிளம்பிய வெற்றிமாறன்!
விடுதலை 2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மேடையில் கோபப்பட்டு வெற்றிமாறன் பாதியிலே பேச்சை நிறுத்தியதால் பரபரப்பு.
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2-வது பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு 200 நாட்களுக்கு மேல் நடந்துவந்த நிலையில், ஒரு வழியாக முடிந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.
படம் வெளியாக சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இளையராஜா, விஜய் சேதுபதி, சூரி என பலரும் கலந்து கொண்டார்கள். அப்போது விழா மேடையில் பேசிய வெற்றிமாறன் படத்தில் பணியாற்றிய அனைவர்க்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பேசிக்கொண்டு இருந்தார்.
இது குறித்து மேடையில் பேச தொடங்கிய வெற்றிமாறன் ” இந்த படத்தில் பணியாற்றிய என்னுடைய உதவியாளர்கள் மற்றும் அனைவருமே இந்த படம் உருவாவதற்கு முக்கிய காரணமாக உள்ளனர். அவர்களுக்கு நான் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என பேசி கொண்டு இருந்தார். அப்போது கீழே இருந்த ஒருவர் இவர் பெயரை சொல்லு என்பது போல கூறினார்.
இதனை கேட்டுக்கடுப்பான வெற்றிமாறன் ” டேய் நான் தான் யார் பேரையும் சொல்ல மாட்டேன் என்று ஏற்கனவே கூறிவிட்டேன். பிறகு எதற்காக இப்படி? ஏன்டா, டீம் என்றால் என்ன டா அனைவரும் சேர்ந்தது தான் ஒரு டீம் அதனால் தான் அப்படி சொன்னேன்” என கோபத்தின் உச்சிக்கு சென்று நன்றி எனக்கூறி மைக்கை கீழே வைத்துவிட்டு சென்றார். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் வீடியோவை பார்த்த பலரும் நன்றி சொல்ல இவ்வளவு கோபமா? எனவும், பாவம் அவர் என்ன கோபத்தில் இருந்தாரோ என்பது போல கூறி வருகிறார்கள்.