அதானியை சிறையில் அடைக்க வேண்டும்! ராகுல் காந்தி ஆவேசம்!
அதானி மீதான குற்றசாட்டை விசாரிக்க அவர் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் அரசு அவரை பாதுகாத்து வருகிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
டெல்லி : அதானி குழுமம் மீதும் கெளதம் அதானி மீதும் அமெரிக்க வழக்கறிஞர் குழு குற்றசாட்டை முன்வைத்து வழக்கு தொடர்ந்துள்ளனர். அதானி குழுமம் சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதானி குழும விளக்கம் அளிக்கவும் அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு, செபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகின்றன. திங்கள் கிழமை தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2 நாட்களாக அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டும் வருகிறது.
இப்படியான சூழலில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை அவர் ஏற்கப் போகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? வெளிப்படையாக அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கப் போகிறார். அதானி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். 100க்கும் மேற்பட்டவர்கள் மீது சிறிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் . அதுபோல அதானி கைது செய்யப்பட வேண்டும். அமெரிக்க நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான கோடிகள் குற்றசாட்டுகள் உள்ளன. அவர் சிறையில் விசாரணையில் இருக்க வேண்டும். ஆனால், அவரை அரசாங்கம் பாதுகாத்து வருகிறது” என்று ராகுல் காந்தி பேசினார்.