ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழக காவல்துறை! மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தமிழக சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 27) சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்துள்ள 3,359 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது, தமிழ்நாடு காவல்துறை பற்றி வாழ்த்தி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில்,” உலகில் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக தமிழ்நாடு காவல்துறை போற்றப்படுகிறது. அதற்கு உதாரணமாக குடியரசு தின விழா, சுதந்திர தின விழா என பல்வேறு விழாக்களில் தமிழக காவல்துறையினர் விருது பெற்று வருகிறார்கள். தமிழக காவல்துறையில் மகளிர் இணைந்து பொன்விழா ஆண்டு அண்மையில் கொண்டாடப்பட்டது. திமுக ஆட்சியில் தான் காவலர் ஆணையம் அதிக அளவில் அமைக்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு பெருமைகளை தமிழக காவல்துறை கொண்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் காவலர் முதல் டிஎஸ்பி வரையிலான பதவிகளுக்கு 17,000 காவலர்கள், 1252 தீயணைப்பு வீரர்கள், 366 சிறை துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமை காவலர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை, காவல் ஆய்வாளர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை, இடர்படி ஆயிரம் ரூபாய், மாதாந்திர உணவுப்படி, சிறப்பு படி, பெண் காவலர்களுக்கு ஆனந்தம் திட்டம் ஆகியவற்றை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.
காவலர்களுக்கு இதுஒரு போர்க்கால ஆட்சி போன்றது. இந்த சமயத்தில் நீங்கள் பணிக்கு சேர்ந்துள்ள உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் குற்றத்தை குறைபதை காட்டிலும் புதிய குற்றங்களை தடுக்க வேண்டும். சைபர் குற்றங்கள், போதை பொருள் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தை தடுப்பது உள்ளிட்டவை இப்போது உங்கள் முன் இருக்கும் சவாலாகும். குற்றத்தை தடுத்து விட்டோம் என்பது தான் உங்கள் ட்ராக் ரெக்கார்டாக இருக்க வேண்டும்.
இன்று பணி ஆணை வாங்கும் நீங்கள் , நாளை பதக்கங்கள் வாங்க வேண்டும், பணிக்கு சேர்ந்த புதியதில் உங்களுக்கு இருக்கும் மிடுக்கு பணியில் இருந்து ஓய்வு பெரும் வரை இருக்க வேண்டும். உங்கள் உடல் நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும். தொழில்நுட்ப ரீதியாகவும் உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.