36 மணிநேரம் ஒரே இடத்தில்., மிக கனமழை! தனியார் வானிலை ஆர்வலர் அப்டேட்!
காற்றழுத்த தாழ்வு நிலை இன்று பிற்பகல் புயலாக வலுபெறும் என்றும், டிசம்பர் 1ஆம் தேதி வரையில் தமிழகத்தில் டெல்டா, வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என தனியார் வானிலை ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இன்று பிற்பகல் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்த வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை மற்றும் சென்னை வானிலை மைய இயக்குனரகம் அவ்வப்போது தகவல் தெரிவித்து வந்தாலும், தனியார் வானிலை ஆர்வலர்களும் தற்போதைய வானிலை நிலவரம் மற்றும் கனமழை எச்சரிக்கை குறித்த முக்கிய தகவல்களை அவ்வப்போது அளித்து வருகின்றனர்.
தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்திரன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாகையில் இருந்து 420 கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து 530 கிமீ தொலைவிலும் நிலவி வருகிறது. இது அடுத்த 6 மணிநேரத்தில் புயலாக மாறும்.
புயலாக மாறி வடக்கு வடமேற்கு திசையில் இன்று மாலையில் நகர தொடங்கும் இதனால் டெல்டா பகுதியில் மிக கனமழை பெய்யும். இந்த புயல் 36 மணிநேரம் ஒரே இடத்தில் நகராமல் நிற்கும். அப்போது, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மிக அதி கனமழை பெய்யும் எனவும், அதன் பிறகு படிப்படியாக புயலின் தாக்கம் குறைந்து வடகடலோர மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்யும்.
நவம்பர் 27, 28ஆம் தேதி மட்டுமின்றி, டிசம்பர் 1ஆம் தேதிவரை நாகை முதல் சென்னை வரையில் உள்ள கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை தீவிரமடையும்.” என தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.