நாளை நடைபெறவிருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நவ. 27-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறவுள்ளதால் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருந்தது.
ஏற்கனவே, கனமழை எதிரொலி காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலை பருவ எழுத்துத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்திருந்த சூழலில், தற்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இந்த விவரம் அறிவிக்கப்படுவதாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
மேலும், கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் நாளையும் அங்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.