“பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முன்னிலை”…அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

பெண்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

Minister Geethajeevan

சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், ‘பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், அதனைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து திமுக எம்பி.கனிமொழியும் அவரது கருத்தை தெரிவித்திருந்தார். பெண்கள் வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆகையால், பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுப்போம் என அவரும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தற்போது, ‘பெண்களுக்கான உரிமைகளைக் காப்பது போலவே அவர்களது கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது’ என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “பெண்களுக்கான உரிமைகளைக் காப்பது போலவே அவர்களது கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது. பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தங்களுடைய பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் தமிழ்நாட்டில் நிலவுவதால்தான் தமிழ்நாட்டில் பெண்கள் மிக அதிக அளவில் கல்வி கற்கிறவர்களாகவும், வேலைக்குச் செல்பவர்களாகவும், சுயமானவர்களாகவும் உள்ளனர்.

இந்தியாவில் உற்பத்தித்துறையில் உள்ள பெண்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் அதாவது 43% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 1973 ஆம் ஆண்டுப் பெண்களை முதன்முதலாகக் காவல்துறையில் இணைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகத் திரு.மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாகக் காவல்நிலையங்களைத் திறந்துவருகிறார்.

தமிழ்நாட்டில் மொத்தம் 241 அனைத்து மகளிர் காவல்நிலையங்கள், 32 ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவுகள், 7 புலன் விசாரணைப் பிரிவுகள், 43 குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவுகள் மற்றும் 39 சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. சிறார்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதற்கு மாநிலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 194 சிறார் நட்பு அறைகள் மற்றும் 1,542 குழந்தைகள் நல காவல் அலுவலர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

மாநில அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பொருட்டுத் தடுப்புப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு, அப்பிரிவு ஒரு கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையில் இயங்கி வருகிறது. அதேபோல ‘ப்ராஜக்ட் பள்ளிக்கூடம்’ திட்டம், ‘இமைகள் திட்டம்’ ஆகியவற்றின் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் விரைவான நீதி கிடைக்க அரசு செயலாற்றி வருகிறது.

பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, காவல்துறை ஆகிய மூன்று துறைகளும் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் நடத்தி வருகின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இறுதியாக 2022 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடுமுழுமைக்கும் இலட்சத்துக்கு 65 என்றால் தமிழ்நாட்டில் 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6 என்ற அளவிலும் தமிழ்நாட்டில் 0.7 அளவிலும் உள்ளது. பெண்களின் சமூக வாழ்வை உயர்த்துவதற்கான ‘விடியல் பயணம்’, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ போன்ற நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களைச் செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களைத் தடுப்பதை அரசின் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயலாற்றுகிறது திராவிட மாடல் அரசு.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எத்தகைய வன்முறையையும் இந்த அரசு சகித்துக் கொள் மிகுந்த கண்காணிப்புடன் உறுதியான நடவடிக்கைகளை எப்போதும் எடுத்து வருகிறது. அதனால்தான் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது” என அமைச்சர் கீதாஜீவன் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்