கனமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்…முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு!
கனமழை எச்சரிக்கை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல் (Fengal) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் நாகை, சென்னை, மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வரும் நாட்களிலும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், இந்த கனமழையை எதிர்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.
இக்கூட்டத்தின்போது, முதலமைச்சர் ஸ்டாலின் அதிகனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களான மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களுடன் காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு அம்மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
முதல்வர் கேட்டபிறகு மாவட்ட ஆட்சியர்கள் தங்களுடைய மாவட்டங்களில் போதுமான நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளுக்கென பல்துறை மண்டலக் குழுக்கள், மருத்துவக் குழுக்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
குறிப்பாக, கனமழை வெளுத்து வாங்கி வரும் நாகப்பட்டினம் மாவட்டத்தில், 125 JCB இயந்திரங்கள். 75 படகுகள். 250 ஜெனரேட்டர்கள். 281 மர அறுப்பான்கள்: கடலூர் மாவட்டத்தில் 242 JCB இயந்திரங்கள், 51 படகுகள், 28 ஜெனரேட்டர்கள், 104 மர அறுப்பான்கள். 58 மோட்டார் பம்புகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில், 85 JCB இயந்திரங்கள். 70 படகுகள். 164 ஜெனரேட்டர்கள். 57 மர அறுப்பான்கள். 34 மோட்டார் பம்புகள் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 125 JCB இயந்திரங்கள், 18 படகுகள், 142 ஜெனரேட்டர்கள், 73 மர அறுப்பான்கள், 18 மோட்டார் பம்புகள்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 59 JCB இயந்திரங்கள், 29 படருகள். 69 ஜெனரேட்டர்கள் 711 மர அறுப்பான்கள். 42 மோட்டார் பம்புகள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, முதலமைச்சர் நிவாரண முகாம்களை அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும். கனமழையின் போது பொதுமக்களை தாழ்வான பகுதிகளிலிருந்து முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரவேண்டும் என்றும், வெள்ளநீர் தேங்கி பயிர்கள் சேதமடையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் , மின்சார வசதி தடையின்றி கிடைத்திட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.