மகாராஷ்டிரா புதிய முதலமைச்சர் யார்? ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே!
மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து அம்மாநில முதல்வர் பொறுப்பை ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்தார்.
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை பாஜக 132 இடங்களை தனித்து பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 13 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே போதும் என்ற சூழல் நிலவுகிறது.
கடந்த முறை தேர்தலில் பாஜக அதிக இடங்களை (105) பெற்றிருந்தாலும் , சிவசேனா ஆதரவுடன் அவர்களுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்து ஆட்சியை நடத்தி வந்தது. பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் செயல்பட்டு வந்தனர்.
இந்த முறை தேர்தலில் பாஜக முன்பை விட அதிக இடங்களை வென்று சிவசேனா அல்லாத மற்ற கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் கூட ஆட்சியமைக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் இந்த முறை முதலமைச்சர் பதவியை பாஜக விட்டுக்கொடுக்காது என்று தான் மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
அதற்கேற்றாற் போல, சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும் தனது ஆதரவாளர்களை மும்பையில் உள்ள தனது இல்லத்திற்கு வர வேண்டாம் என்று முன்பே அறிவுறுத்தி விட்டார். அதனை அடுத்து, மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை புறப்பட்டு சென்றார். அதற்கு முன்னரே பாஜக தலைவரும் மாநில துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவும் ஆளுநர் மாளிகை சென்றிருந்தார்.
பிறகு, மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் மகாராஷ்டிரா மாநில முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஏக்நாத் ஷிண்டே வழங்கினார். அடுத்து புதிய முதலமைச்சர் யார் என்பதை விரைவில் மகாயுதி கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும், மகாராஷ்டிரா புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் அறிவிக்கப்படுவார் என்று தான் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.