பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமும்… இபிஎஸ் தாக்கல் செய்த சட்டமசோதாவும்…
2020இல் தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற வரையறை எதுவும் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றம் செய்தார். அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களும், கடலூர், புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்களில் தலா 5 தாலுகாக்களும் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
இந்த வேளாண் பாதுகாப்பு மண்டலமாக வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்கள் செயல்படுத்த கூடாது என்றும், தோல் பதனிடும் தொழிற்சாலை, இரசாயன தொழிற்சாலை, இரும்பு உள்ளிட்ட உலோக தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகள் அமைக்க தடை விதிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த சட்டமசோதா குறித்து , நேற்று, தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதா மத்திய அமைச்சகத்தில் தகவல் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த மத்திய சுற்றுசூழல் அமைச்சகம், தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என வரையறுக்கப்பட்டு மத்திய அரசுக்கு எந்த ஒரு முன்வரைவும் அனுப்பப்படவில்லை என பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், 2020இல் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த சட்ட முன்வரையறையை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என்றும் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை குறிப்பிட்டு பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இருந்தும் மாநில அரசு பரிந்துரைபடி டெல்டாவில் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்ததால் 2020ஆம் ஆண்டு முதல் அப்பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி அளிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 3 திட்டங்களின் கால அளவு மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.