ரெட் அலர்ட் எதிரொலி: நாளை நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
நாளை நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே சுமார் 880 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால் தற்போது சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
ஏற்கனவே, நாகை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருவதாலும், நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (நவம்பர் 26, செவ்வாய்க்கிழமை) கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் அறிவித்துள்ளார்.
Collector P.Akash declares holiday for schools and colleges in Nagapattinam district on November 26, Tuesday in view of heavy rainfall warning @THChennai
— S.Ganesan (@GanesanTheHindu) November 25, 2024