தூத்துக்குடி மீனவர்களே! 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!
மணிக்கு 75கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மறுஅறிவிப்பு வரும் வரை தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே சுமார் 880 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும்.
இதன் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் கொடுத்த இந்த அறிவிப்பின் படி, மீன் வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, வரும் 26-ஆம் தேதி முதல் வரும் 29-ஆம் தேதி வரை காற்றின் வேகம் அதிகபட்சமாக 75 கிமீ வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும், மறுஅறிவிப்பு வரும் வரை தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீன் வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.