ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 288 சட்டமன்றத் தொகுதிகளில் 230 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
மகாராஷ்டிராவில் இப்பொழுது முதல்வர் நாற்காலிக்கான போட்டி தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சரை இன்றைக்குள் தீர்மானிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பாக ஆளும் மகாயுதி கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், யார் முதல்வராக பதவியேற்பது என்பது குறித்து இன்று நடைபெறும் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இந்த கூட்டத்தில் மகாயுதியின் அனைத்து தொகுதி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்வார்கள்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 288 சட்டமன்றத் தொகுதிகளில் 230 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இதில் பாஜக போட்டியிட்ட 148 தொகுதிகளில் 132ல் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆனால், இந்த முறையும் முதலமைச்சர் பதவியை தமக்கே வழங்க வேண்டும் என தற்போதைய முதலமைச்சர் ஏக்நாக் ஷிண்டே ஒருபுறம் நெருக்கடி கொடுக்க, மறுபுறத்தில் தேவேந்திர பட்நாவிஸ் முதலமைச்சரானால் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என அஜித் பவார் தரப்பு கூறியதால் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது.
இதனிடையே, கூட்டணி கட்சிகளை விட பாஜக இரண்டு மடங்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் முதல்வர் நாற்காலியை பாஜக தன் கையிலிருந்து போகவிடுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. என்ன நடக்க போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
குடியரசுத் தலைவர் ஆட்சி?
மகாராஷ்டிராவில் நாளையுடன் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனால், உடனடியாக ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. ஆனால், இதுவரை கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவு பெறாததால் இன்னும் முதல்வர் தேர்வு செய்யப்படவில்லை.
இதனால், நாளை மறுநாள் (புதன்கிழமை) ஜனாதிபதி ஆட்சி அமையலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேநேரம், சில நாள் அவகாசம் அளிக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்றும் சொல்லப்படுகிறது.
எதிர்க்கட்சி இல்லாத மகாராஷ்டிரா?
மகாராஷ்டிர சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற ஒரு கட்சி, குறைந்தபட்சம் 10% எம்எல்ஏ-க்களை கொண்டிருக்க வேண்டும். அதாவது 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் 28 தொகுதிகள் தேவை.
ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் எந்த கட்சிக்கும் அத்தனை எம்எல்ஏ-க்கள் கிடைக்காததால், 57 ஆண்டுகளுக்குப் பின் எதிர்க்கட்சி இல்லாத சட்டசபை அம்மாநிலத்தில் அமையவுள்ளது. இது ஆளும் பாஜகவிற்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.