‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!
பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் இணைந்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் தொடங்கிய இந்த மெகா ஏலத்தில் மிக முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
ஏலத்தில் முதலில் நடைபெற்ற செஷனில் சென்னை அணி மிக முக்கிய வீரர்களை குறி வைத்தும் தொகை அதிகமானதால் அது கைகொடுக்கவில்லை. ஆனால், 2-வது செஷனின் போது சென்னை அணி மிக முக்கியப் பங்கை ஆற்றியுள்ளனர். அதன்படி, பார்க்கையில் முக்கிய ஒன்றாக ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு அஸ்வினை ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது, இதனால் தொடர்ந்து 3 ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடி வந்தார். அதற்கு முன்பு அவர் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 2008-ம் ஆண்டு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, 2016, 2017ம் ஆண்டுகளில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காகவும், 2018, 2019-ம் ஆண்டுகளில் பஞ்சாப் அணிக்காகவும், 2020, 2021 ஆண்டுகளில் டெல்லி அணியாகவும் இறுதியில் 2022, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் ராஜஸ்தான் அணிக்காகவும் விளையாடினர்.
தற்போது இவரை மீண்டும் சென்னை அணி, 2025 ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட ரூ.9.75 கோடிக்கு எடுத்து உள்ளனர். இதனால், சென்னை அணியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். மேலும், சென்னை அணிக்காக சேப்பாக் மைதானத்தில் அவர் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருந்து வருகின்றனர்.