உ.பி-யில் பரபரப்பு…சர்வே செய்ய சென்ற அதிகாரிகள் போலீஸ் மீது தாக்குதல்!
சாம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வுக்காக சென்ற தொல்லியல் துறை அதிகாரி மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தி போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவம் பதற்றத்தை உண்டு செய்துள்ளது.
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக கோவில் ஒன்று இருந்ததாகவும், அந்த கோவிலை இடித்துவிட்டு அதன் பிறகு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது எனக் கூறி வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் சம்பலில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து பார்த்த நீதிமன்றம் மசூதி ஆய்வு செய்யவேண்டும்…அதற்கு ஒரு குழு அமைத்து அதற்கான ஆய்வை தொடருங்கள் என உத்தரவிட்டது. நீதி மன்றத்தின் உத்தரவின்படி, உள்ளூர் போலீஸார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி மசூதியில் ஆய்வு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்கு அந்த பகுதியில் இருந்த பலரும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தார்கள்.
இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் ஆய்வு குழு ஷாஹி ஜமா மசூதிக்கு சென்றது. இவர்கள் வருகை தந்ததை பார்த்த உள்ளூர் மக்கள் பலரும் ஒன்றாக இணைந்து ஆய்வு செய்தவர்கள் மீது கல்வீச்சு நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்தவுடன் அங்கு பரபரப்பு ஏற்பட்டதன் காரணமாக இது தொடர்ந்தால் விளைவுகள் பிரச்சினையாகிவிடும் என்பதற்காக போலீசார் கல் வீசுவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்கள்.
போலீசார் கூறியும் அதனை கண்டுகொள்ளாமல் உள்ளூர் மக்கள் தொடர்ச்சியாக கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. எனவே, நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினார்கள். இதனால் இன்னும் கோபமடைந்த உள்ளூர் மக்கள் அங்கிருந்த வாகனங்களையும் தீ வைத்து எரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் உத்திரபிரதேசம் மாநிலத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து உத்தரபிரதேசம் சம்பல் எஸ்பி கிருஷன் குமார் கூறுகையில், “நீதிமன்ற உத்தரவுப்படி, சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜமா மசூதியில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நேரத்தில் சிலர் திரண்டு வந்து கற்களை வீசத் தொடங்கினர்.
ஜமா மஸ்ஜித் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சில சப்-இன்ஸ்பெக்டர்களின் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. ட்ரோன்கள் மூலம் வீடியோ எடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே, அதன் மூலம் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கூறினார்.