ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் 4வது முறையாக ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதில், ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பர் 13,20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மொத்தம் 2.60 கோடி வாக்காளர்களைக் கொண்ட இம்மாநிலத்தில் இரு கட்டங்களையும் சேர்த்து 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநிலத்தில் ஆளும் கட்சி கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43, காங்கிரஸ் 30, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனி னிஸ்ட்) 4 இடங்களில் போட்டியிட்டன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 68, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் 10, ஐக்கிய ஜனதா தளம் 2, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) ஓரிடத்தில் களம் கண்டன. முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவருமான ஹேமந்த் சோரன் (பர்ஹைத்), அவரது மனைவி கல் பனா சோரன் (கண்டே), மாநில பாஜக தலைவர் பாபுலால் மராண்டி (தன்வர்), அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் கட்சித் தலைவர் சுதேஷ் மகதோ (சில்லி) உள்பட மொத்தம் 1211 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தற்பொழுது, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகின்றன. ஆம், ஜார்க்கண்டில் ஜே.எம்.எம்., கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
அதன்படி, ஆட்சி அமைக்க 81 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 56 தொகுதிகளில் முன்னிலை வகித்து ஏறக்குறைய ஆட்சியை தக்கவைப்பதை உறுதி செய்துள்ளது. பாஜக 24 இடங்களை கைப்பற்றி பின்னடைவை சந்தித்துள்ளது.
இதில், செரைகெல்லா தொகுதியில் பாஜகவில் போட்டியிட்ட சம்பாய் சோரன் 20,447 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் JMM கட்சி வேட்பாளரை வீழ்த்தியுள்ளார். ஜேஎம்எம் கட்சியிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியேறிய சம்பாய், பாஜகவில் இணைந்தார்.
இதன் மூலம், பழங்குடி மக்களின் வாக்குகள் பாஜகவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதனை முறியடித்து அங்கு மீண்டும் JMM ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் 4வது முறையாக ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த தேர்தலில் ஜார்க்கண்ட்
கடந்த 2019, பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களில் வென்றது. அக்கட்சி தலைமையிலான கூட்டணி 47 இடங்களுடன் பாஜகவிடமி ருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 25 இடங்களே கிடைத்தன.