அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!
ஆஸ்திரேலியாவில்செயல்பட்டு வரும் அதானி குழும நிலக்கரி சுரங்கம் அருகே உள்ள நீர்நிலைகளில் இனப்பாகுபாடு பார்க்கப்படுவதாக அந்நாட்டு மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச புகார் காரணமாக நேற்று அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன.
மேலும், அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு சர்வதேச சந்தைகளில் முதிலீடுகளை ஈர்க்க உள்ளதாகவும் புகாரில் குறிப்பிடபட்டது. இந்த குற்றசாட்டை அடுத்து, அமெரிக்காவில் முதலீட்டுக்கான கடன் பத்திரங்களை வெளியிடும் முடிவை தற்காலிகமாக அதானி குழுமம் நிறுத்தி வைத்தது.
அதானி குழுமம் – அமெரிக்க வழக்கறிஞர்கள் விவகாரத்தை அடுத்து, கென்யா அரசு அதானி குழுமத்துடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அமெரிக்கா, கென்யாவை அடுத்து தற்போது ஆஸ்திரேலியாவிலும் அதானி குழுமம் புது பிரச்சனையை சந்தித்து வருகிறது.
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பகுதியில் இயங்கி வரும் அதானி குழும நிலக்கரி சுரங்கம் அருகே நாகானா யர்பைன் வாங்கன் & ஜகலிங்கோ பழங்குடியினர்கள் வசித்து வருகின்றனர். இவர்களை, நிலக்கரி சுரங்கள் இருக்கும் பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை எனக் கூறி புதிய புகாரை ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையத்தில் பழங்குடியினர் அமைப்பு அளித்துள்ளது.
இந்த, இனப்பாகுபாடு பிரச்சனையை நீண்ட காலமாக நாங்கள் எதிர்கொள்வதாக பழங்குடியினர் அமைப்பு கூறி வருகிறது. இக்குற்றச்சாட்டை ஆஸ்திரேலியாவில் உள்ள அதானி நிலக்கரி சுரங்க நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது. மேலும், இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.