வெளுத்து வாங்கும் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறையா? இல்லையா?
கனமழை பெய்து வருகின்ற நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால், இன்று பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராமநாதபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.21) விடுமுறை அளிப்பது குறித்து, அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
மேலும், மாவட்ட அளவில் பரவலாக கனமழை உள்ள நேரங்களில் மட்டுமே ஆட்சியரால் விடுமுறை அறிவிக்கப்படும். கன மழையின் போது பள்ளிகளில் அதிகளவு மழை நீர் தேங்கி இருக்கும் சூழல் இருந்தால், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முதன்மை கல்வி அலுவலரின் அனுமதியுடன் பள்ளிக்கு விடுமுறை விடலாம் என நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக, பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்துக்கு செல்வோரும் மழையில் சென்று கொண்டிருக்கின்றனர்.